சென்னை: திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த தொகுதியில் கட்சித்தலைவர் வேல்முருகன் போட்டியிடுவார் என நம்பப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆட்சி கைப்பற்ற சபதம் ஏற்றுள்ள திமுக மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணியில்,
காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேதும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு மதுராந்தகம் (தனி), சாத்தூர், பல்லடம், மதுரை (தெற்கு), வாசுதேவநல்லூர் (தனி), அரியலூர் உள்ளிட்ட 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த 6 தொகுதியிலும் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிடுகிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கடையநல்லூர், சிதம்பரம், வாணியம்பாடி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உடன்பாடு காணப்பட்டது.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு உசிலம்பட்டி தொகுதி ஒதுக்கப்பட்டது. இங்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்படும் 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
ஆதித்தமிழர் பேரவை கட்சிக்கு அவினாசி (தனி) தொகுதியும், மக்கள் விடுதலைகட்சிக்கு நிலக்கோட்டை (தனி) தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 2 கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.
மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் ஒன்றில் உதயசூரியன் சின்னத்திலும், மற்றொருன்றில் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறது.
தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்த தொகுதி பண்ரூட்டி என இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக – தமிழக வாழ்வுரிமை கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பண்ருட்டி தொகுதியில் கட்சித்தலைவர் வேல்முருகன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என நம்பப்படுகிறது.