சென்னை
அரசியல் கட்சிகள் அறிவித்துள்ள இலவச சலுகைகளால் தமிழகத்தின் கடன் சுமை மேலும் அதிகரிக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என மு க ஸ்டாலின் அறிவித்தார். அதைத் தொடர்ந்து அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1500 மற்றும் ஒரு குடும்பத்துக்கு வருடத்துக்கு 6 எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
இவ்வாறு வாக்காளர்களுக்கு இலவசம் வழங்க மாறி மாறி திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் வாக்குறுதி அளித்து வருகின்றன. ஆனால் தேர்தலுக்குப் பிறகு இந்த அறிவிப்புக்கள் பொருளாதார ரீதியாக எந்த பாதிப்பை உண்டாகும் என்பது குறித்து யோசிக்கவில்லை எனப் பலரும் தெரிவிக்கின்றனர். குறிப்பாகப் பொருளாதார நிபுணர்கள் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பிரபல பொருளாதார நிபுணர் சேதுராமன் சாத்தப்பன், ”ஏற்கனவே இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அரசின் கடன் சுமை 4,85,000 கோடிக்கு மேல் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் இது 5.70 லட்சம் கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்கு வங்கியை மனதில் கொண்டு இந்த அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதனால் அரசின் கடன் சுமை ஆண்டுக்கு மேலும் ரூ.30,000 கோடி வரை அதிகரிக்கும். இதன் மூலம் ஏற்கனவே உள்ள பற்றாக்குறை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதற்கான வருமானம் குறித்த எவ்வித திட்டமும் இல்லை. எனவே கடன் சுமை ஏறிக் கொண்டுதான் செல்லும். இது மிகவும் கவலை அளிக்கும் விஷயமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதே கருத்தை ஆடிட்டர்கள் கார்த்திகேயன், அரவிந்த் தங்கம், அருண்குமார், சம்பத்குமார், சிவப்பிரகாசம் தனஞ்செயன் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். மேலும் பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியர்களும் இந்த செலவை ஈடுகட்ட வரிச்சுமைகள் கடுமையாக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.