கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்கு கடந்த 1ம் தேதி வருகை தந்த ராகுல்காந்தி தக்கலை அருகே சந்தித்த மாணவனுக்கு ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்கி அனுப்பி வைத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த மார்ச் 1ம் தேதி குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டார். அவர் முளகுமூடு செல்லும்போது பரைக்கோடு பகுதியில் சிறுவர்கள் சிலர் காமராஜர் படத்தை ஏந்தி நின்று வரவேற்பு அளித்தனர். அப்போது காமராஜர் படத்துடன் நின்ற சிறுவனை அழைத்து சென்று பேசினார். அப்போது அந்த சிறுவன் தனது பெயர் ஆன்ட்னி பெலிக்ஸ் எனவும், 6ம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறியுள்ளான்.
ராகுல்காந்தி சிறுவனிடம் பேசும்போது உனக்கு எதில் ஆர்வம் என்று கேட்டுள்ளார். அப்போது அந்த சிறுவன் ‘‘ரன்னிங்’’ என்று கூறியுள்ளான். உனக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்கி கொடுப்பதாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
ராகுல்காந்தி பிரசார பயணம் முடித்து சென்று நேற்று 9 வது நாளாகியிருந்த நிலையில், அந்த சிறுவனின் முகவரிக்கு ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்கி அனுப்பி வைத்துள்ளார்.