அதிமுக கூட்டணியில் கண்டுகொள்ளப்படாமல் போனதால், கருணாஸ், தமிமுன் அன்சாரி போன்றவர்கள், வாலண்டியராக வந்து, திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக கடிதம் கொடுத்தார்கள். அங்கே, தங்களுக்கென்று மரியாதை இருக்குமென்றும், தங்களுக்கென்று கடந்தமுறை அதிமுக ஒதுக்கியதுபோல், தலா 1 தொகுதியாவது கிடைக்கும் என்றும் எதிர்பார்த்தார்கள்.
ஆனால், திமுக தரப்போ அவர்களை சட்டைக்கூட செய்யவில்லை. அவர்கள் கொடுத்த கடிதத்தையாவது வாங்கிப் பார்த்தார்களா! என்பதே சந்தேகம்தான். ஸ்டாலின் அவரது வேலையில் பிஸியாக இருந்துவிட்டார்.
இதனால், பெருத்த ஏமாற்றமடைந்த இவர்கள், ஆதரவளிப்பதாய் கூறிய அடுத்த நாளே, ஆதரவை வாபஸ் பெறுகிறோம் என்று அறிவித்து, காமெடியன்களாய் காட்சியளிக்கிறார்கள்!
இப்போது, 2004ம் ஆண்டு நிகழ்விற்கு செல்வோம். தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேச பண்ணையார் என்ற தாதா, ஜெயலலிதாவின் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்படுகிறார். இதனால், தென்மாவட்ட நாடார்களில் ஒரு பகுதியினர் அதிமுக அரசு மீது கோபத்தில் இருக்கின்றனர்.
அந்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. திமுக தலைமையில், அத்தனை முக்கிய கட்சிகளுக்கு ஒன்று சேர்கின்றன. இந்நிலையில், அன்றைய திருச்செந்தூர்(இன்றைய தூத்துக்குடி) மக்களவைத் தொகுதியில், திமுக சார்பாக யார் நிறுத்தப்பட்டாலும் எளிதாக வெல்வார் என்பதுதான் நிலைமையே! ஆனால், அன்றைய திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, கட்சிக்கு சம்பந்தமேயில்லாத ராதிகா செல்வியை(வெங்கடேச பண்ணையாரின் மனைவி) வேட்பாளராக்கி, வென்ற பிறகு, அவரை மத்திய இணையமைச்சராகவும் ஆக்குகிறார். தமிழ்நாடு & புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளையும் திமுக கூட்டணியே வெல்கிறது.
திமுகவால் அப்படியெல்லாம் உயரே கொண்டுசெல்லப்பட்ட ராதிகா செல்வி, இன்று எங்கிருக்கிறார் என்பதே யாருக்கும் தெரியவில்லை. திமுகவில், மறைந்த ஆலடி அருணா அப்போது அத்தொகுதியை தனக்கு கேட்டார். ஆனால், அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அவரும் கட்சியை விட்டே விலகிவிட்டார். அந்தவகையில், கலைஞர் கருணாநிதியின் அரசியல் நடவடிக்கை ஏற்க முடியாத ஒன்றாக இருந்தது.
ஆனால், ஸ்டாலினின் செயல்பாடு, அந்த விஷயத்தில் முதிர்ச்சியாக இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டியுள்ளது.