கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், ஆக்ஸ்போர்டு நிறுவனம் தயாரித்துள்ள அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போடும் பணியை ஆஸ்திரியா நாடு திடீரென தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் ஒருவர் திடீரென உயரிழந்ததைத் தொடர்ந்து, தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிக நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில், இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் செயல்பாடு நல்ல பலனை கொடுப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளனர். இந்த தடுப்பூசியானது, இந்தியாவிலும் சீரம் நிறுவனத்துடன் இணைந்து கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவிட் -19 தடுப்பூசிகளின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மதிப்பீடு செய்த உலக சுகாதார நிறுவனம், அஸ்ட்ராஜெனெகாவின் கோவிட் -19 தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டு ஒப்புதலை வழங்கியது. இதன் காரணமாக இந்த தடுப்பூசி உலகின் ஏழ்மையான சில நாடுகளுக்கு விநியோகிக்கத் தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், ஆஸ்திரியா நாட்டுக்கு அஸ்ட்ராஜெனிகா கொரோனா தடுப்பூசி அனுப்பப்பட்டு, பொதுமக்களுக்கு செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு ஏராளமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், சுமார் 49 வயது பெண் ஒருவர், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான உடற்கூறாய்வில், கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பிறகு அவரது ரத்தம் கடுமையாக உறைந்து, அதன் விளைவாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல, தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர் ஒருவரும், ரத்தம் உறைதல் அதிகரித்து நுரையீரலில் அடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அஸ்ட்ராஜெனிகா கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக அந்நாடு அறிவித்து உள்ளது.