சென்னை
தமிழக முதல்வர் பழனிச்சாமி தேர்தலுக்காக விவசாயி வேஷம் போடுவதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறி உள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆனால் சில வாரங்களுக்கு முன்பிருந்தே திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் ஒவ்வொரு பகுதியிலும் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்னும் தலைப்பில் பிரச்சாரம் நடத்தி வருகிறார். அவ்வகையில் சென்னை கொட்டிவாக்கத்தில் அவர் பிரசாரம் செய்தார்.
அப்போது ஸ்டாலின், ”தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் பேருந்து கட்டணத்தைக் குறைப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும். அத்துடன் குறைந்த கட்டண பேருந்துகளும் அறிமுகப்படுத்தப்படும். திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை ஊழியர்களின் பணப்பலன்கள் முழுமையாக வழங்கப்படும். வரப்போகும் திமுக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும்.
தமிழகத்தில் ஜிஎஸ்டி குளறுபடியால் தொழில்வளம் குன்றிவிட்டது. ஆயினும் இந்த கொரோனா காலத்திலும் கொள்ளையடிக்கும் கூட்டத்திற்கு இந்த தேர்தலில் முடிவு கட்டுவோம். கருணாநிதி மெட்ரோ ரயில் திட்டத்தைத் துவக்கினார். இதற்கு ஜப்பான் சென்று நான் நிதி பெற்று வந்தேன். மெட்ரோ திட்டம் வெற்றிபெற்றதற்கு திமுக தான் காரணம். சென்னை மக்கள் இதை மறக்கமாட்டார்கள்.
இப்போது சென்னை மாநகராட்சியில் எங்கு பார்த்தாலும் குப்பை நிரம்பி வருகிறது. அவற்றை அப்புறப்படுத்தாமல், இந்த குப்பை அரசு, குப்பைக்கு வரி போட்டது. அதை நான் எதிர்த்ததும் திரும்பப்பெற்றனர் . அதிமுக,வை வீழ்த்த இந்த ஸ்டாலின் அவதாரம் எல்லாம் எடுக்கத் தேவையில்லை.
கடந்த இரண்டு மாதங்களாக நான் சொல்வது அனைத்தையும் முதல்வர் பழனிசாமி செய்துள்ளார். அவருக்கு நான் சொல்லும்வரையில் இதைப்பற்றி எல்லாம் தெரியாது. அவருக்கே அவருடைய அறிவிப்புகளில் எந்தவித ஈடுபாடும் இல்லை.
முதல்வர் பழனிசாமி, தேர்தலுக்காக விவசாயி வேஷம், சமூகநீதி வேஷம் போடுகிறார். திமுக ஆட்சியில் அனைவருக்கும் சமூகநீதி கொண்டுவருவோம். வரும் மே 2ம் தேதி தேர்தல் முடிவுகளில் திமுக ஆட்சி என்பது உறுதியாகும். உங்கள் கவலைகளை, கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யும் அரசாக எங்கள் அரசு இருக்கும். மக்களின் விளக்காகவும் நாட்டுக்குத் தொண்டனாகவும் ஸ்டாலினாகிய நான் இருப்பேன்.” என உரையாற்றி உள்ளார்.