தூத்துக்குடி: தென்மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் எடப்பாடி பழனிச்சாமி,  திமுக ஆட்சியில் மக்களுக்கா பாதுகாப்பு? மக்கள்தான் முதல்வர் அவர்கள் சொல்லும் பணியைச் செய்வதே என் கடமை’ என ஆவேசமாக கூறினார்.

அதிமுக துணைஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி 6வது கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.  தூத்துக்குடி, திருநெல்வேலி , தென்காசி மாவட்டங்களில் அவரது தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்த திடல் அருகே நேற்று மாலை  நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் திமுகவை கடுமையாக சாடினார்.

திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு என்று கூறுகிறார்கள்..  ஆனால், திமுக ஆட்சியிலா மக்களுக்கு  பாதுகாப்பு என்று கேள்வி எழுப்பியவர்,  “திமுக ஆட்சியில் சட்டப்பேரவைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா பேசும்போது அவரைப் பேசவிடாமல் புத்தகங்களைத் தூக்கி எறிந்தனர். தலை முடியைப் பிடித்து இழுத்தனர், ஜெயலலிதாவை அடிக்கவும் செய்தனர்.

ஒரு மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவருக்குப் பாதுகாப்பில்லாதபோது,  மக்களுக்கா பாதுகாப்பு இருக்கப்போகிறது, இதுபோன்ற வன்முறை செயல்களை செய்துவிட்டு, இப்போது, எம்ஜிஆர் என் பெரியப்பா என்று ஸ்டாலின் பேசுகிறார்.

ஐந்து முறை ஆட்சியில் இருக்கும்போது மக்களுக்கு எதுவும் செய்யாத திமுக தற்போது ஆட்சியில் இல்லாதபோது மக்களைச் சந்தித்து மனுக்களை வாங்கிவருகிறது. மு.க. ஸ்டாலின் தேர்தல் வரும்போதெல்லாம் நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்துவிடுவார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது இதேபோன்று வாங்கிய மனுக்கள் என்ன ஆயிற்று?

13 ஆண்டு காலம் மத்திய அரசுடன் திமுகவினர் ஆட்சியில் இருந்துள்ளார்கள். நிதி ஆதாரம், பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு எனப் புதிய திட்டம் என எதுவும் செய்யவில்லை. தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பதவி வேண்டும் என்பதற்காகவே கருணாநிதி டெல்லிக்குச் செல்வார். மக்களுக்காகச் செல்ல வில்லை.

ஆனால் எந்த ஒரு திட்டத்தையும் திட்டமிட்டுச் செய்யும் அரசு அதிமுக அரசு. மக்களுக்குப் பல நல்ல திட்டங்களைத் தொடர்ந்து அளித்துவரும் அதிமுகதான் தமிழ்நாட்டில் மீண்டும் வெற்றிபெறப் போகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சொன்னதுபோல அவருக்குப் பின்னால் இன்னும் 100 ஆண்டுகள் நிச்சயம் அதிமுக நல்லாட்சி நடக்கும். உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்துதான் முதலமைச்சராக வந்துள்ளேன். ஆகவே மக்களுக்கு என்ன வேண்டும் என்பதைச் சிந்தித்துச் செயல்படும் அரசு அதிமுக அரசு. வருங்காலத்தில் நிலமற்ற ஏழை, எளிய குடும்பத்தினருக்கு அரசு சார்பில் கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும். நிலம், வீடு என எதுவும் இல்லாதவர்களுக்கு அரசே நிலத்தை வாங்கி அதில் கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் என்றுமே என்னை முதலமைச்சராக நினைப்பதே கிடையாது. என்னைப் பொறுத்தவரையில் மக்களாகிய நீங்கள்தான் முதலமைச்சர்; நீங்கள் சொல்லும் பணியைச் செய்வது என் கடமை. ஆகவே மக்களுக்கு மறுபடியும் சேவை செய்திட அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்”.

இவ்வாறு பேசினார்.