லண்டன்: இங்கிலாந்திற்கு எதிரான சென்னையின் முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றதற்கு, இந்திய அணியை கிண்டல் செய்துள்ளார் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்.
இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை, 227 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக இழந்தது விராத் கோலி தலைமையிலான இந்திய அணி. இத்தோல்விக்கு அணி தேர்வு மற்றும் அணியை வழிநடத்திய விதம் போன்றவை காரணங்களாக கூறப்படுகின்றன. முக்கியமாக விராத் கோலியின் கேப்டன்சி மீது பெரிய விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் கெவின் பீட்டர்சன் பேசியுள்ளதாவது, “இந்திய அணி வீரர்களை நான் இதற்கு முன்பே எச்சரித்திருந்தேன். நினைவிருக்கிறதா? ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றபின் அதிகமாகக் கொண்டாடாதீர்கள், ஆடாதீர்கள் என்று எச்சரித்திருந்தேன்; நினைவிருக்கிறதா?” என்றுள்ளார்.
ஆஸ்திரேலிய வெற்றியை இந்தியா கொண்டாடியபோது, கெவின் பீட்டர்சன் கூறியிருந்ததாவது, “அனைத்துத் தடைகளையும் கடந்து ஆஸ்திரேலியத் தொடரை வென்றதால், இந்திய அணி வீரர்கள் வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், உண்மையான கிரிக்கெட் அணி அடுத்த சில வாரங்களில் இந்தியா வரவுள்ளது. உங்கள் சொந்த மண்ணில் அவர்களை வெல்ல வேண்டும்.
ஆதலால், எச்சரிக்கையாக இருங்கள். இந்திய அணியினர் வெற்றியைக் கொண்டாடுவதை இரு வாரங்களுக்குக் குறைத்துக் கொள்ளுங்கள்” என்று பேசியிருந்தார்.
இந்த முந்தைய கருத்தைத்தான் தற்போது நினைவிற்கு கொண்டுவந்து, கிண்டல் செய்துள்ளார் கெவின் பீட்டர்சன்.