பெங்களூரு: எல்லையில் எந்த தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களுருவில் அதிநவீன விமான கண்காட்சி இன்று தொடங்கியது. இன்று தொடங்கும் இந்த கண்காட்சி வரும் 5ம் தேதி வரை நடக்கிறது. கண்காட்சியின் முதல் நாளில், விமானங்களை இயக்கி வீரர்கள் சாகசங்களை நிகழ்த்தினர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: நாட்டின் பாதுகாப்பு துறையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 8 ஆண்டுகளில், ராணுவத்தை நவீனப்படுத்த 130 பில்லியன் டாலர் செலவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு துறையில் நேரடி அன்னிய முதலீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பல முனைகளில் இருந்து அச்சுறுத்தல்களையும் சவால்களையும் நமது நாடு சந்தித்து வருகிறது. தீவிரவாதம், சர்வதேச அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது. எல்லையில் சில பகுதிகளை தன்னிச்சையாக மாற்ற முயற்சி செய்யப்பட்ட சம்பவங்களையும் இந்தியா எதிர்கொண்டுள்ளது. எந்த விலை கொடுத்தாவது எந்த சவாலையும் அச்சுறுத்தல்களையும் முறியடிக்க நாடு தயாராக உள்ளது என்று பேசினார்.