புதுடெல்லி:
டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 2 மாதங்களாக டெல்லி எல்லைப் பகுதிகளில் நெடுஞ்சாலைகளை மறித்துப் போராடி வரும் விவசாயிகள் குடியரசு தினத்தில் இந்தியத் தலைநகரில் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டனர்.

முதலில் இந்தப் பேரணியைத் தவிர்க்க நினைத்தது அரசு. ஆனால், சில நாள்களுக்கு முன்பு டெல்லி போலீசார் இந்தப் பேரணிக்கு அனுமதி அளித்தனர். எனினும், டெல்லி குடியரசு தின அணி வகுப்பு முடிந்த பிறகு 10 மணிக்கு மேல்தான் இந்தப் பேரணி தொடங்க வேண்டும் என்று போலீசார் நிபந்தனை விதித்திருந்தனர்.

சிங்கு, டிக்ரி உள்ளிட்ட விவசாயப் போராட்டங்கள் பெருமளவில் நடக்கும் எல்லைப் பகுதிகளில் இருந்துதான் இந்த டிராக்டர்கள் டெல்லிக்குள் வரவேண்டும். ஆனால், இந்த எல்லைப் பகுதிகளில் போலீசார் பெரிய தடுப்பரண்களை உருவாக்கி வைத்தனர்.

ஆனால், குறிப்பிடப்பட்ட காலை 10 மணிக்கு முன்னதாகவே விவசாயிகள் தடுப்பரண்களை உடைத்துக்கொண்டு தங்கள் டிராக்டர்களோடு எல்லையைக் கடந்து டெல்லிக்குள் நுழைந்தனர்.

இதனால், பேரணியை கட்டுப்படுத்த சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார். இதே போன்று சிங்கு எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது.

நண்பகல் 12 மணிக்கு பிறகே டெல்லிக்குள் விவசாயிகள் டிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே விவசாயிகள் டிராக்டர்களுடன் நுழைய முயற்சி செய்ததால், கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.