மே.வங்க மாநிலத்தில் இன்னும் மூன்று மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி தனி ஆளாக போராடி கொண்டிருக்கும் நிலையில், அவரிடம் இருந்து ஆட்சிய கைப்பற்ற பா.ஜ.க. பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகளை இழுக்கும் படலத்தை பா.ஜ.க. ஆரம்பித்துள்ளது.
இதன் விளைவாக மம்தா பானர்ஜி மந்திரி சபையில் அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி என்பவர், கடந்த மாதம் உள்துறை அமைச்சர் அமீத்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.
அவருடன் ஐந்து திரினாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பாரதிய ஜனதாவில் ஐக்கிய மானார்கள்.
இந்த நிலையில், திரினாமூல் காங்கிரஸ், எம்.எல்.ஏ. அரிந்தம் பட்டாச்சார்யா, நேற்று, காவிக்கட்சியில் இணைந்து விட்டார்.
டெல்லியில் நடந்த நிக்ழ்ச்சியில் மூத்த தலைவர்கள் முன்னிலையில் அவர் பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளார். 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பட்டாச்சார்யா, நாடியா மாவட்டம் சாந்திபூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர் ஆவார். பின்னர், அவர் திரினாமூல் காங்கிரசில் சேர்ந்து விட்டார்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் மேலும் பல தலைவர்கள், திரினாமூல் காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.க. வில் சேருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
– பா. பாரதி