சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்த நிலையில், தமிழகத்தில் பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்றும், அதை கூட்டணி நடைமுறையின்படி அறிவிக்கப்படும் என பாஜக தேர்தல் பொறுப்பாளர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
இது அதிமுகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், பாஜகவின் இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம் ரஜினியின் அரசியல் பின்வாங்கல் என தெரிகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 5 மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டிய நிலை உள்ளது. தேர்தல் அறிவிப்பு மார்ச்சில் வெளியாகும் என தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் தமிழக தேர்தல் களம பரபரப்பான இயங்கி வருகிறது. இதற்கிடையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, அதிமுக தலைமைக்கு எதிராக அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டும் என அதிமுக தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
ஆனால், பாஜக தலைமையோ, ரஜினி அரசியலுக்கு வந்து தங்களுக்கு ஆதரவு தருவார் என கனவுகண்டு வந்தனர். அந்த மிதப்பில், அதிமுகவை மட்டம் தட்டும் வகையில் விமர்சித்து வந்தனர். கடந்த வாரம்கூட பாஜக மாநில பொறுப்பாளர் சிடி ரவி, அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து, தேர்தல் முடிவு வந்தபிறகு தீர்மானிக்கப்படும் என கூறினார். இது அதிமுக தலைவர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்கு அதிமுக துணைஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கே.பி.முனுசாமி பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்ததுடன், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக ஏற்றுக்கொள்பவர்களுடன் மட்டுமே கூட்டணி என அதிரடியாக அறிவித்தார்.
இதற்கிடையில், ரஜினியும், உடல்நலப் பிரச்சினை காரணமாக, அரசியல் கட்சி முடிவை கைவிடுவதாக தெரிவித்து விட்டார். இதனால், பாஜகவின் ஆசையில் மண் விழுந்துள்ளது. இதனால், தமிழகத்தில் ரஜினி மற்றும் சில கட்சிகளின் ஆதரவினால் கால்பதிக்க நினைத்த பாரதிய ஜனதா கட்சியின் கனவு காணல் நீராக கரைந்து போனது. இதனால், பாஜகவுக்கு வேறு வழியில்லை. அதிமுகவின் முதுகில் ஏறி சவாரி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. இல்லையேல், தமிழகத்தில் பாரதியஜனதா கட்சி அரசியல் அனாதையாகிவிடும் என்பதை மறுக்க முடியாது.
இந்த நிலையில், எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வதாகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நடைமுறையின்படி அறிவிக்கப்படுவார் என, பாஜக தேர்தல் பொறுப்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை, புதுப்பேட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேர்தல் பொறுப்பாளர் குஷ்பு, எங்களைப் பொறுத்தவரை அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணி குறித்து இறுதி முடிவு குறித்து 4-5 நாட்களில் எடுக்கப்படும். தமிழகத்தில், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்றுக்கொண்டுதான் இங்கு நிற்கிறோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் எந்த குழப்பமும் வேண்டாம்.
முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில் தயக்கம் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நடைமுறையின்படிதான் அறிவிக்கப்படும். “முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதற்கென சில நெறிமுறைகளும் நடைமுறைகளும் இருக்கின்றன. அதனால் தான் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என சொல்லியிருக்கிறோம். அதனால், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என யாரும் சொல்லவில்லை. தொண்டர்கள் இதுகுறித்து எதுவும் பேசவில்லை. பாஜக – அதிமுக தலைவர்கள் இதனை பேசிக்கொள்வார்கள். நடுவில் நாம் பேசினால்தான் இந்த குழப்பம் வரும்” என தெரிவித்துள்ளார்.
குஷ்புவின் குளுகுளு தகவல் அதிமுகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதேவேளையில், பாஜகவும் வேறுவழியில்லாமல் அதிமுகவின் காலில் சரணாகதி அடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.