சென்னை
தமக்கு இறப்பு ஏற்படும் வரை அரசியலில் ஈடுபடப் போவதில்லை என தமிழருவி மணியன் கூறி உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் பல வருடங்களாக அரசியல் கட்சி தொடங்கப்போவதாக கூறி வந்தார். பலரும் அதை நம்பி அவர் பின்னே அணிவகுக்கத் தயாராக இருந்தனர். இறுதியாக இந்த மாதம் 31 ஆம் தேதி அன்று அவர் தனது கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார்.
தாம் தொடங்க உள்ள அரசியல் கட்சியின் மேற்பார்வையாளராகத் தமிழருவி மணியனை ரஜினிகாந்த் நியமித்திருந்தார்.
நேற்று திடீரென ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள 3 பக்க அறிக்கையில் தமது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சியைத் தொடங்கப் போவது இல்லை என அறிவித்தார். தமிழக அரசியலில் இது கடும் பரபரப்பை ஏற்படுத்திய போதும் ரஜினியின் உடல் நலம் மட்டுமே தங்களுக்கு முக்கியம் என அவர் ரசிகர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து கூறி உள்ளனர்
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தாம் இந்த அறிவிப்பால் செத்து விட்டதை போல் உணர்வதாகவும் இனி இறக்கும் வரை ஒரு போதும் அரசியலில் ஈடுபடப் போவது கிடையாது எனவும் விரக்தியுடன் அறிவித்துள்ளார்.