சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா நாளையில் இருந்து வரும்  31ம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ள வெளிமாவட்ட பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும், கொரோனா பரிசோதனை கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த விஷ்ணுதாஸ் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந் நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறி உள்ளதாவது: கொரோனா அறிகுறி இல்லாதவர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மாலை 3.00-4.00, 4.30-5.30, 6.00-7.00 ஆகிய நேரங்களில் தலா 200 வெளி மாவட்ட பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.