டெல்லி :
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி, டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் பார்வையாளர் மாடத்தின் ஒரு பகுதியில் உள்ள தனது பெயரை நீக்க வேண்டும் என்றும், தான் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்த மறைந்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு பெரோஸ் ஷா மைதானத்தில் சிலை வைக்க முடிவெடுத்ததை தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிஷன் சிங் பேடி இந்த முடிவை அறிவித்திருக்கிறார்.
விளையாட்டு துறையில் விளையாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செயலை வன்மையாக கண்டிப்பதாக டெல்லி கிரிக்கெட் சங்க தலைவருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
1999 முதல் 2013 ம் ஆண்டுவரை டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக பொறுப்புவகித்தார் அருண் ஜெட்லி, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவரது மகன் ரோஹன் ஜெட்லி இந்த சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு வேண்டியவர்களுக்கு சிலைவைக்கும் ரோஹன் ஜெட்லியின் இந்த செயலை கண்டித்து பேடி இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனாகவும், பின்னர் அணியின் மேலாளராகவும் இருந்த பிஷன் சிங் பேடி, 1990 – 91ம் ஆண்டு இந்திய அணியின் முதல் அதிகாரபூர்வ பயிற்சியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.