தெலுங்கு ‘சூப்பர்ஸ்டார்’ சிரஞ்சீவி இப்போது ‘ஆச்சார்யா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதனையடுத்து மலையாளத்தில் மோகன்லால் நடித்து பெரும் வெற்றி பெற்ற ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ‘ரீ-மேக்’கில் நடிக்கிறார்.
இந்த படத்தை நம்ம ஊர் மோகன்ராஜா டைரக்டு செய்கிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இதன் ஷுட்டிங்கை ஆரம்பித்து ஏப்ரலில் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
மோகன்ராஜா, ஏற்கனவே சிரஞ்சீவி நடித்த ஹிட்லர் என்ற தெலுங்கு படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
“இந்த படத்தை எந்த சமரசமும் இல்லாமல் பெரும் பொருள் செலவில் தயாரிக்க இருக்கிறோம். லூசிபர் படத்தின் மூலக்கதையை மட்டும் எடுத்துக்கொண்டு, தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் நிறைய மாற்றங்கள் செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளார், தயாரிப்பாளர்களில் ஒருவரான என்..வி.பிரசாத்.
இந்த படத்தை பிரசாத்துடன் இணைந்து சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தயாரிக்கிறார்.
– பா. பாரதி