சென்னை

க்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் நேரில் வந்து கேட்டாலும் தங்கள்  சின்னத்தை விட்டுத் தர முடியாது என எம் ஜி ஆர் மக்கள் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளன.  இதற்கான முதல்கட்ட பணிகளாக சின்னங்களை ஒதுக்கும் பணியைத் தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.   அங்கீகாரம் பெறாத ஆனால் பதிவு செய்யப்பட்ட 9 கட்சிகளுக்கு நேற்று சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.  அ ம மு க வுக்கு குக்கர் ஒதுக்கப்பட்டது.  ஆனால் ம நீ ம கட்சிக்குத் தமிழகத்தில் பேட்டரி டார்ச்  லைட் சின்னம் அளிக்கவில்லை.

தமிழகத்தில் அந்த சின்னம் எம் ஜி ஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.  அதே வேளையில் புதுச்சேரியில் அந்த சின்னம் ம நீ ம கட்சிக்கு அளிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே அதே சின்னத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட ம நீ ம கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.   பேட்டரி டார்ச்  லைட் சின்னத்தைத் திரும்பப் பெற ம நீ ம கட்சியினர் பெருமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர்,.

இது குறித்து எம் ஜி ஆர் மக்கள் கட்சியின் தலைவர் விஸ்வநாதன் ” நான் ‘அனைத்துலக எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற அமைப்பைப் பல ஆண்டுகளாக நடத்தி வந்தேன். கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அம்பத்தூர், ஆர்.கே.நகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டேன். அதன் பிறகு அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்த பிறகு கடந்த 5-10-2018-ல் ‘எம்ஜிஆர் மக்கள் கட்சி’யை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தேன்.

நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான சின்னங்களை ஒதுக்கத் தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டது.  நான் பேட்டரி டார்ச், டை, சாக்லேட் ஆகிய சின்னங்களைக் கேட்டிருந்தேன். நான் முதலில் கேட்ட பேட்டரி டார்ச்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.  கட்சி பதிவு அடிப்படையில் ம.நீ.ம. கட்சியை விட  எங்கள் கட்சி மூத்த கட்சி. ஆகவே, முன்னுரிமை அடிப்படையில் ‘பேட்டரி டார்ச்’ சின்னம் எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

பேட்டரி லைட் சின்னத்தை விட்டுக் கொடுக்குமாறு ம.நீ.ம. கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சிலர் என்னை தொடர்பு கொண்டு ‘கேட்டனர்.  ஆனால் நான் விரும்பி கேட்ட சின்னம் என்பதால் மறுத்து விட்டேன். கமலஹாசனே நேரில் வந்து கேட்டாலும் ‘பேட்டரி டார்ச்’ சின்னத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்.   ஒரு வேளை கமலஹாசன் நீதிமன்றத்தை நாடினால் அதைத் தேர்தல் ஆணையம் எதிர் கொள்ளும்’ என தெரிவித்துள்ளார்.