அஷ்ட நரசிம்மர் கோவில் – பகுதி 1
தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்னும் பக்தனின் வாய்மொழிக்கு ஏற்ப தூணில் இருந்து வந்த கடவுள் நரசிம்மர். கோபத்துடன் இரணியனை வதம் செய்த நரசிம்மருக்கு எட்டு கோவில்கள் புகழ் வாய்ந்தவையாக உள்ளன. அவற்றில் இன்று முதல் கோவிலைப் பற்றிப் பார்ப்போம்.
1 . பூவரசங்குப்பம்
இரண்யகசிபுவை வதம் செய்த பிறகும், கோபம் தணியாத நரசிம்மர், காடுகளிலும், மலைகளிலும் சுற்றித் திரிந்தார். அப்போது தன்னை வழிபட்ட முனிவர்களுக்கு அவர் காட்சியளித்தார். அந்தத் தலமே இதுவாகும். தட்சிண அகோபிலம் என்ற புராணப்பெயரைக் கொண்டது.
தூணிலிருந்து நரசிம்மர் வெளிப்பட்ட வரலாற்றின் அடிப்படையில், ஒரு தூணையே நரசிம்மராகக் கருதி இங்கு வழிபாடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் பல்லவ மன்னர்கள் காலத்தில் ஆலயம் எழுப்பி, சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூலவர் லட்சுமி நரசிம்மர், உற்சவர் பிரகலாதவரதன், தாயார் அமிர்தவல்லி.
பொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில் அவர் உருவம் பெரியதாகவும், தாயாரின் உருவம் சிறியதாகவும் அமைந்திருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில், ஆணுக்குப் பெண் சரிசமம் என்பதை உணர்த்தும் விதமாகப் பெருமாளின் உருவத்திற்குத் தகுந்தாற்போல, தாயாரின் திருவுருவமும் அமைக்கப்பட்டிருக்கிறது.
பண்ருட்டியிலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் சின்னக்கள்ளிப்பட்டு என்ற ஊரிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் சிறுவந்தாடு என்ற ஊரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது.