டெல்லி: மத்தியஅரசு அறிவித்த, புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு வரும் 10ந்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ள நிலையில், மத்தியஅரசின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போது கட்டுமானங்களை எப்படி தொடங்குகிறீர்கள்? என கேள்வி எழுப்பினர்.
தலைநகர் டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அருகில் புதிய கட்டடத்தை எழுப்புவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டில் நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு முன் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை எழுப்புவதற்கான பணிகளில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ரூ.971 கோடி செலவில் கட்டப்படவுள்ள, புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி, வரும் 10-ஆம் தேதி அடிக்கல் நாட்டுவார் என க மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்திருந்தார்.
புதிய நாடாளுமன்ற கட்டடம் நாட்டின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையிலும, நிலநடுக்கத்தைத் தாங்கக் கூடிய வலிமையுடன் கட்டப்பட உள்ளதாகவும், 64,500 சதுர மீட்டா் பரப்பில் நாடாளுமன்றக் கட்டடம் எழுப்பப்படவுள்ளது என்றும் தெரிவித்திருந்தார். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 1,224 எம்.பி.க்கள் அமர முடியும். மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான அலுவலகங்கள் அடங்கிய வளாகம், புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அருகில் எழுப்பப்படவுள்ளது. புதிய நாடாளுமன்றத்தைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டு, அது நிலுவையில் உள்ளது. இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புதிய நாடாளுமன்றம் கட்டுவது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போது, கட்டிடம் கட்டுவது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அப்போதுஆஜரான ஆஜரான சொலிசிடர் ஜெனரல், வெறும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மட்டுமே நடைபெறப் போவதாகவும், வேறு மரங்களை வெட்டுவது போன்று எந்தவொரு நிகழ்வும் நடைபெறாது என கூறினார். இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அடிக்கல் நாட்டு விழழ நிகழ்ச்சியை நடத்திக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதுடன், சம்பந்தப்பட்ட இடத்தில், மரங்களை வெட்டவும் பழைய கட்டடங்களை இடிக்கவும் தடை விதித்ததோடு, புதிய கட்டடம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெறவில்லை என்பதை சொலிசிட்டர் ஜெனரல் உறுதி செய்ய வேண்டும் உத்தரவிட்டுள்ளது.