ஐதராபாத் :
மின்சார திருத்தச் சட்டம் 2020 கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதைத் தொடர்ந்து, மாநிலங்கள் தங்கள் மின்சார தேவைக்கு தனியாரின் தயவை எதிர்பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்து குறிப்பிட்ட குறைந்தபட்ச சதவீத மின்சாரத்தை வாங்க மாநிலங்களுக்கு பரிந்துரைக்க வழி செய்துள்ள இந்த சட்டத்தின் மூலம், மாநில அரசுகளை மத்திய அரசு தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்க நிர்பந்திக்கிறது.
இந்த தனியார் நிறுவனங்களை மாநில அரசு தன்னிச்சையாக தேர்ந்தெடுக்க அதிகாரம் வழங்கப்படவில்லை மாறாக மின்சார ஒப்பந்த அமலாக்கத்துறை எனும் மத்திய அரசு அமைத்துள்ள துறை பரிந்துரைக்கும் நபர்களிடம் இருந்து மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் வாங்க முடியும்.
இந்த சட்டத்தினால், மின்மிகை மாநிலமாக விளங்கிவரும் தெலுங்கானா மாநிலத்தில், இதர மின் தேவைகளுக்காக தனியாரிடமிருந்து அதிகப்படியாக 7 சதவீத மின்சாரத்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற மாநில அரசின் விதியை மத்திய அரசு மாற்றியிருப்பதோடு, இதனை 19 சதவீதமாக உயர்த்தி தனியாரிடம் வாங்கும் மின்சாரத்தின் அளவை அதிகரித்திருக்கிறது.
இப்படி தனியாரிடமிருந்து வாங்கும் மின்சாரத்தை மாநில மின் விநியோக துறை மூலமாக விநியோகம் செய்து அவர்களுக்கான பணத்தை திருப்பி செலுத்தவேண்டும்.
மத்திய அரசின் ஒப்புதலோடு செயல்படும் அதானி நிறுவனத்துடன் மட்டுமே இந்த மின்சாரத்தை பெற முடியும் என்ற சூழல் தற்போது தெலுங்கானாவில் நிலவி வருகிறது.
குறித்த காலகெடுவுக்குள் இதனை பெறாத மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அபராதம் விதிக்க இந்த சட்டத்திருத்தம் வழி செய்திருக்கிறது.
மேலும் வாடிக்கையாளர்களே இல்லாத அதானி குழுமம் போன்ற மின் உற்பத்தியாளர்களுக்கு வாடிக்கையாளர் பிடித்து தரும் முகைமையாக பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
தெலுங்கானாவில் 45000 கோடி ரூபாய் முதலீட்டில் 8000 மெகாவாட் மின்சார உற்பத்தியில் ஈடுபடும் அதானி குழுமத்திற்கு இதுவரை வாடிக்கையாளர் யாரும் இல்லாத நிலையில், மத்திய அரசின் இந்த சட்டத்தால், மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள தெலுங்கானா மாநிலம் இதனை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதற்கு, தெலுங்கானா மாநிலம் அரசு உடன்படாத பட்சத்தில் அதற்கு அபராதம் விதிக்க இந்த சட்டம் வழிவகை செய்துள்ளது, இதனால், தாமதிக்கும் ஒவ்வொரு ஆண்டும், முதல் ஆண்டு யூனிட் ஒன்றுக்கு 0.50 பைசா அபராதமும், இரண்டாம் ஆண்டு யூனிட் ஒன்றுக்கு ரூ. 1 ம், அதற்கடுத்த ஆண்டுகளில் ரூ. 2 ம் அபராதமாக விதிக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும், மாநில அரசின் மொத்த மின்சார தேவையில் 19 சதவீதம் தனியாரிடமிருந்து பெறவேண்டிய சூழ்நிலையில், பெரும் தொகையை அபராதமாக செலுத்த விரும்பாத தெலுங்கானா அரசு தற்போது அதானியின் தயவை நாடவேண்டிய சூழ்நிலையில் உள்ளதுடன் மின்துறையின் பல்வேறு திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தவேண்டிய நிலையில் உள்ளது.
2014 ல் மின்சார பற்றாக்குறை மாநிலமாக இருந்த தெலுங்கானாவை நீர் மின், அனல் மின் நிலையம் உள்ளிட்ட தொலைநோக்கு திட்டங்களால் ஆறு ஆண்டுகளில் மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.