பாட்னா
இன்று மாலை மீண்டும் பீகார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிதிஷ்குமார் பதவி ஏற்கிறார்.
பீகார் மாநில சட்டப்பேரவையில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றுக் கடந்த 10ஆம் தேதி முடிவு அறிவிக்கப்பாட்டது. இதில் ஐ ஜ த மற்றும் பாஜக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. அடுத்த முதல்வராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பீகார் மாநில ஆளுநர் பாகு சவுகானைச் சந்தித்து ஆட்சி அமைக்க நிதிஷ்குமார் உரிமை கோரி தனக்கு ஆதரவு அளிக்கும் உறுப்பினர்களின் கடிதங்களை வழங்கினார். இதையொட்டி 4 ஆம் முறையாகப் பீகார் மாநில முதல்வராக இன்று மாலை நிதிஷ்குமார் பதவி ஏற்க உள்ளார்.
பீகார் மாநில சட்டப்பேரவை பாஜக தலைவராக தர்கிஷோர் பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரும் பாஜகவின் ரேணு தேவி ஆகியோரும் துணை முதல்வர்களாகப் பதவி ஏற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஐ ஜ த உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தற்போது ஐஜத சட்டப்பேரவை தேர்தலில் 43 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆனால் பாஜக 74 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. ஆகவே பாஜக சொற்படி இரு துணை முதல்வர்கள் என்பதை நிதிஷ்குமார் தட்டிக் கழிக்க முடியாத நிலை உள்ளதால் அவர் ஒப்புக் கொள்வார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.