2003 ஆம் ஆண்டு ‘மிஸ் இந்தியா யுனிவர்ஸ்’ போட்டியில் வெற்றி பெற்றதால் இந்தி சினிமாவில் நடிகையாகும் வாய்ப்பை பெற்ற தனுஸ்ரீ தத்தா, சில படங்களில் நடித்தார்.

2008 ஆம் ஆண்டு ‘’ HORN OK PLEASSS’’ என்ற இந்தி படத்தில் அவர் நானா படேகருடன் இணைந்து நடித்தார். அந்த படத்தின் பாடல் காட்சியில் நடித்த போது, நானா படேகர், தன்னிடம் ‘செக்ஸ்’ குறும்பு செய்தததாக புகார் தெரிவித்து தனுஸ்ரீ பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்திய சினிமாவில் “மீ டூ” இயக்கத்துக்கு வித்திட்ட தனுஸ்ரீ, சில ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவுக்கு ‘குட் பை’ சொல்லி விட்டு அமெரிக்கா பறந்தார்.

மீண்டும் அவர் சினிமாவில் நடிப்பதற்காக இந்தியா வருகிறார். இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.
“அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நான் ஐ.டி. துறையில் வேலையில் சேர்ந்து விட்டதாக தகவல்கள் பரவி உள்ளன. அது உண்மை அல்ல.

அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையில் ஐ.டி.வேலை எனக்கு கிடைத்தது உண்மை தான். ஆனால் சினிமா மீதான ஈர்ப்பால் அதனை ஏற்கவில்லை. சில தென்னிந்திய படங்களிலும், இந்தி படங்களிலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. எனவே விரைவில் இந்தியா வந்து தங்குவேன். அந்த படங்கள் மற்றும் வெப் தொடரிலும் நடிக்க உள்ளேன்” என இன்ஸ்டாகிராமில் தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.

– பா. பாரதி