மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வரும் நபா்களுக்கு அபராதம் அல்லது தெருவை சுத்தம் செய்ய வேண்டும் என்று மும்பை மாநகராட்சியான பிஎம்சி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, தற்போது 90% தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் முக்கவசம் (மாஸ்க்) மற்றும் தனிநபர் இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. ஆனால், இந்த நடைமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க மறுத்த வருவதால், மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தி உள்ளன.
அதுபோல, மும்பையிலும் பொதுமக்கள் பாதுகாப்பு நடைமுறைகளை மக்கள் தீவிரமாக பின்பற்ற உத்தரவிட்டுள்ள பிஎம்சி, முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வரும் நபா்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்தது. ஆனால், அதையும் பலர் கண்டுகொள்ளாமல் சுற்றித்திரிந்து வந்ததால், மாஸ்க் அணியாமல் வரும் நபர் தெருவைச் சுத்தம் செய்தல் போன்ற சமூக பணிகள் செய்ய வண்டும் என்று அதிரடியாக கூறியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மும்பை மாநகராட்சி அதிகாரி, இந்த அதிரடி நடவடிக்கை ஏற்கனவே அந்தேரி மேற்கு, ஜுஹு, வொசோவா போன்ற மாநகரின் பல்வேறு பகுதிகளில் இந்த தண்டனை ஏற்கெனவே நடைமுறைக்கு வந்துவிட்டது. இதுவரை 35 போ இதுபோன்ற சமூகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
மும்பை மாநகராட்சி திடக் கழிவு மேலாண்மை விதிகளின்படி, சாலைகளில் எச்சில் துப்பும் நபா்களுக்கு இதுபோன்ற தண்டனைகளை வழங்கும் அதிகாரம் மும்பை மாநகராட்சிக்கு உள்ளது. அதனடிப்படையிலேயே இந்த நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.