சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.எம். கட்டோச் நியமிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆளே இல்லாத டீக்கடையில் யாருக்குப்பா டீ ஆத்துறீங்க… என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேண்டுகோளை ஏற்று மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கிளை அமைக்க மோடிஅரசு ஒப்புக்கொண்டு அறிவிப்பு வெளியிடட்டது. அதன்படி, மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் ரூபாய் 1264 கோடி திட்ட மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2018ம்ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால், அறிவிப்போது கிடப்பில் போடப்பட்டது.
பின்னர் கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு, பிரதமர் மோடியால், கடந்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது, தோப்பூரில், சுமார் 202 ஏக்கரில் 750 படுக்கை வசதியுடன் கட்டப்படும் என்றும், 48 மாதங்களில் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த பணிகளும் நடைபெறாமல், கிடப்பில் போடப்பட்டது.
இதற்கு காரணமாக கொரோனா தொற்றை சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரிக்கு மத்தியஅரசு இதுவரை ஒருபைசா கூட நிதி ஒதுக்காமல் இழுத்தடித்து வருகிறது. இதற்கிடையில், மருத்துவமனை கட்டப்படுவதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில், சுற்றுச்சுவர் கட்டுவதற்காக மட்டும் நிதி ஒதுக்கப்பட்டு, வேலைகள் நடைபெற்று வருகின்றன.
மற்றபடி, மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் தங்குவதற்கான விடுதிகள் உள்பட எந்தவொரு திட்டம் குறித்தும், அதற்கான நிதி குறித்தும் வாய்திறக்க மறுத்து வருகிறது மத்தியஅரசு.
இதுதொடர்பாக பொதுநல வழக்கும் தொடரப்பட்டுள்ளது உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது. வழக்கின் விசாரணையின்போது நீதிபதிகள், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு தரப்பில் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கிடையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கி இருப்பதால், எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் மீண்டும் தலைத்தூக்கத் தொடங்கி உள்ளது.
தமிழக மக்களை ஏமாற்றும் நோக்கத்தில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுவதற்கான நிதியே ஒதுக்காத சூழலில், திடீரென மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவர் நியமிக்கப்பட்டு உள்ளார். ஜிப்மர் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.எம். கட்டோச், இனிமேல் கட்டப்பட உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் அவருடன் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷயன் மற்றும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை புற்றுநோய் அறுவைசிகிச்சைப் பிரிவு மருத்துவர் சரவணன் சண்முகம் ஆகியோரும் உறுப்பினர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இது தொடர்பாக 17 பேர கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் பல இடங்கள் இன்னும் காலியாகவே உள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தலை மனதில்கொண்டு மத்தியஅரசு, தமிழக மக்களை ஏமாற்றும் வகையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவர், இயக்குனர்கள் நியமித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் மத்தியஅரசின் நடவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
மதுரை எய்ம்ஸ்க்கு நியமிக்கப்பட்டுள்ள மருத்துவர் சுப்பையா. ஏபிவிபி அமைப்பின் தேசிய தலைவராக உள்ளார். தான் குடியிருந்து வரும் பிளாட்டின் பக்கத்து வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது. இது குறித்து சந்திரா சம்பத் என்பவர் அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் சுப்பையா சண்முகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தான் நடந்து கொண்டது தவறுதான் என்று கூறி மன்னிப்பு கேட்டதால் சுப்பையா மீதான புகாரை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது..