சென்னை: ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கான ரூ. 6.5 லட்சம் சொத்து வரியை நாளை நள்ளிரவு 12 மணிக்குள் ரஜினிகாந்த் கட்ட தவறினால் 2 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்திற்கு, கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சொத்து வரி செலுத்துமாறு, சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
அதை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மனுவில் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் சொத்து வரி செலுத்தப்பட்டுள்ளது. கொரானா காரணமாக மார்ச் 24ம் தேதி முதல் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் எந்த நிகழ்ச்சிகளும் நடைப்பெறவில்லை.
ஆகையால் எந்த வருமானமும் கிடைக்கவில்லை. திருமண மண்டபத்திற்கு சொத்து வரியாக 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறு செப்டம்பர் 10ம் தேதி சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சொத்து வரி செலுத்த விலக்கு அளிக்க வேண்டும், அபராதமோ, வட்டியோ விதிக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என்று ரஜினிகாந்த் மனுவில் தெரிவித்திருந்தார்.
சென்னை மாநகராட்சிக்கு கடந்த 23ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியும் இது குறித்து எந்த பதிலும் வரவில்லை என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதி வரி வசூலிக்கும்படி அனுப்பிய கடிதத்தில் உரிய முடிவெடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டுமென என்று ரஜினி தரப்பில் வாதிடப்பட்டது.
அதை ஏற்க மறுத்த நீதிபதி, செப்டம்பர் 23ம் தேதி கடிதம் அனுப்பிவிட்டு 29ம் தேதியே வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதா ? என கேள்வி எழுப்பினார். மாநகராட்சியிடம் மனு கொடுத்த ஒரு வாரத்தில் எப்படி வழக்கு தொடரமுடியும் என்றும், நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவகாசம் வேண்டாமா என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, மனுவை வாபஸ் பெறுவதாக ரஜினி தரப்பில் கூறப்பட்டது. இந் நிலையில், நாளை இரவு 12 மணிக்குள் ரூ.6.5 லட்சம் வரியை ரஜினிகாந்த் கட்ட தவறினால் 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. ராகவேந்திரா மண்டப விவகாரத்தில் ரஜினியை ஹைகோர்ட் ஒரு பக்கம் எச்சரித்துள்ள நிலையில் சென்னை மாநகராட்சியும் கெடு விதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.