டில்லி
டில்லி சென்றுள்ள நடிகை குஷ்பு நாளை பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
பாலிவுட்டில் இருந்து தமிழகத்துக்கு வந்து கோவில் கட்டும் அளவுக்குப் புகழ்பெற்ற நடிகை குஷ்பு. இவர் ஆரம்பத்தில் ஜெயா டிவியில் நிகழ்வுகள் நடத்தி வரும் போது அதிமுகவுக்கு ஆதரவாக இருந்தார். அதன்பிறகு திமுகவில் இணைந்து 2016 ஆம் ஆண்டு அங்கிருந்தும் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
குஷ்புவுக்கு அகில இந்தியச் செய்தி தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்ட போதிலும் அவர் தேசிய அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். சில மாதங்களாக அவர் எவ்வித கட்சி பணியிலும் ஈடுபடாமல் விலகி உள்ளார். இதுவரை தனக்கு எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் அவர் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்பட்டது.
சமீபத்தில் பாஜக அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையைக் காங்கிரஸ் தீவிரமாக எதிர்த்தது. ஆயினும் குஷ்பு அதற்கு ஆதரவு தெரிவித்தார். இதையொட்டி அவர் பாஜகவில் இணைவார் எனப் பேசப்பட்டது. ஆனால் குஷ்பு அதை மறுத்தார். கடந்த திங்கள் அன்று காங்கிரஸ் சார்பில் உபி பெண் பலாத்கார கொலையைக் கண்டித்து காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் கலந்துக் கொண்டதை அவர் குறிப்பிட்டார்.
தற்போது குஷ்பு டில்லிக்குச் சென்றுள்ளார். அவர் நாளை பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளை குஷ்பு ஜே பி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.