டெல்லி: கொரோனா தொற்று பரவலை முழுமையாக தடுக்க இரண்டு முறை (2 டோஸ்) தடுப்பூசிகள் போடுவதே சாதகமானது என்றும், 2021 ஜூலைக்குள் 25 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்து உள்ளார்.
‘சண்டே சம்வத்’ தளத்தின் மத்திய சுகாதாரத்துறை டாக்டர் ஹர்சவர்தன், சமூக ஊடகங்களில் பின்தொடர்கிறவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது கொரோனா மற்றும் தடுப்பூசி தொடர்பான கேள்விகளுக்கு பதில் தெரிவித்தார்.
அதன்படி, 2021ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் இந்தியாவில் 25 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு உள்ளது, தடுப்பூசி போடுவதற்கான முன்னுரிமை பட்டியலை மாநிலங்களிடம் பெற திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்காக மத்தியஅரசு ரூ.40 முதல் 50 கோடி வரை ஒதுக்க திட்டமிட்டு உள்ளது.
பொதுவாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் பாதகமான நிகழ்வுகள் பொதுவானவை. இது போன்ற நிகழ்வுகளில் ஊசி போடப்பட்ட இடத்தில் உள்ள வலி, லேசான காய்ச்சல் மற்றும் சிவத்தல், படபடப்பு, மயக்கம் போன்ற உள்ளூர் பக்கவிளைவுகள் அடங்கும். ஆனால் இந்த பக்க விளைவுகள் நிலையற்றவை, பாதிப்புகளை உருவாக்காது.
அதுபோல, தொற்றை விரைவாக கட்டுப்படுத்துவதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசியே விரும்பத்தக்கது. ஆனால் ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசியில் தேவையான அளவு நோய் எதிர்ப்புச்சக்தியை அடைவது பெரும்பாலும் கடினம். அதனால், ‘இரட்டை ‘டோஸ்’ தடுப்பூசிகளே பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், முதல் ‘டோஸ்’ சில நோய் எதிர்ப்பு பாதுகாப்பை அளிக்கிறது. இரண்டாவது ‘டோஸ்’ அதை மேலும் அதிகரிக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும், முதல்கட்டகமாக, “அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் இந்தியாவில் 20 முதல் 25 கோடி பேருக்கு, 40 முதல் 50 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வடிவமைப்பை மத்திய அரசு தயாரித்து வருகிறது.
தடுப்பூசி போடுவதில், கொரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்த்து முன்னணியில் நின்று களப்பணி ஆற்றி வருகிற சுகாதார பணியாளர்களுக்கு (டாக்டர் கள், நர்சுகள், மருத்துவ சார்பு பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் நோயாளிகளை கண்டறிதல், பரிசோதனை மற்றும் சிகிச்சையில் ஈடுபட்டுள்ள பல தொழில் பிரிவினர்) முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும், தடுப்பூசிகளை பாதுகாத்து வைப்பதற்கான குளிரூட்டப்பட்ட வசதிகளையும், பிற உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்துவது தொடர்பான விவரங்களை மாநில அரசுகள் சமர்ப்பிக்கவும் வழிநடத்தப்படுகின்றன. இந்த வசதிகளை வட்டார அளவில் தயார் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசி கொள்முதலை மத்திய அரசுதான் மேற்கொள்ளும். ஒவ்வொரு கொள்முதலும் கண்காணிக்கப்படும். தடுப்பூசி மிகவும் தேவைப்படுகிறவர்களை சென்றடை வதை உறுதி செய்யும் வரை கண்காணிக்கப்படும்.
தடுப்பூசிகள் தயாரானதும், நியாயமான மற்றும் சமமான முறையில் வினியோகிக்கப்படுவதை உறுதி செய்ய எங்கள் அரசு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தடுப்பூசியை எவ்வாறு உறுதி செய்வது என்பதில்தான் எங்களது முன்னுரிமை இருக்கிறது.
நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் தலைமையிலான உயர்மட்ட குழு, தடுப்பூசி தொடர்பான முழு செயல்முறைகளையும் வகுத்து வருகிறது. மேலும், நாட்டில் பல்வேறு தடுப்பூசிகள் கிடைப்பதற்கான காலக்கெடுவை புரிந்து கொள்ளுதல், தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து இந்தியாவுக்கு அதிகபட்ச அளவு தடுப்பூசிகள் கிடைக்கச்செய்வதற்கான உறுதிப்பாட்டை பெறுதல், சரக்கு மற்றும் வினியோக மேலாண்மையை கவனித்தல், அதிக ஆபத்துள்ள குழுக்களுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவற்றில் இந்த குழு செயல்பட்டு வருகிறது.
தடுப்பூசியை திசை திருப்புவதோ, கள்ளச்சந்தைப்படுத்துதலோ இருக்காது. தடுப்பூசிகள் முன்பே தீர்மானிக்கப்பட்ட முன்னுரிமையின்படி, திட்டமிடப்பட்ட முறையில் வினியோகிக்கப்படும். இதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக முழு செயல்முறையின் விவரங்கள் வரும் மாதங்களில் பொதுவெளியில் பகிரப்படும் என தெரிவித்து உள்ளார்.
ரஷியா உள்பட வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் குறித்த கேள்விக்கு, ரஷியாவின் ‘ஸ்புட்னிக்- வி’ தடுப்பூசியை பொறுத்தமட்டில், மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், ஒரு தடுப்பூசியை விட இன்னொரு தடுப்பூசி மேலாது என்பது கருத்து கூறுவது சரியல்லை என்றவர், தே நேரத்தில் நம்மிடம் பல தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை; கொரோனா வைரசுக்கு எதிரான தேவையான நோய் எதிர்ப்புச்சக்தியை கொண்டிருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.