சென்னை: ‘தேசிய சித்த மருத்துவ மையத்தை, தமிழகத்தில் அமைக்க வேண்டும்’ என, பிரதமருக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார்.
அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் இந்த நிதி ஆண்டிலேயே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். அதில், கூறியிருப்பதாவது:
தங்களது தலைமையிலான மத்திய அரசு, இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி ஆகியவற்றுடன் ஓமியோபதி மருத்துவ முறைகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பது அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
மத்திய அரசு தற்போது அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அறிகிறேன். இதற்காக நன்றி தெரிவிப்பதுடன், இந்த மருத்துவ மையத்தை இந்த நிதி ஆண்டிலேயே தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.
இந்த முன்னோடியான நிறுனத்தை, சித்த மருத்துவத்தின் தோற்றப் பகுதியான தமிழகத்தில் நிறுவுவதே பொருத்தமாக இருக்கும். சென்னை அருகில் ஏற்கெனவே இதற்கு தேவையான சாலை, ரயில் போக்குவரத்து வசதிகள் நிறைந்த பகுதியில் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு கோரும் அனைத்து விவரங்களையும் அளிக்கும்படி அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். மத்திய அரசு செயலருக்கு இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுத்து பதிலுக்காக காத்திருக்கிறோம். தமிழகத்தில் அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனம் அமைப்பது குறித்த தங்களது சாதகமான பதிலுக்காக காத்திருக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்