மதுரை: கொரோனா பொதுமுடக்கம் சமயத்தில், பெரும் வரவேற்பை பெற்ற மதுரை சலூன் கடைக்காரர் மீது கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. இதனால், அவர் தலைமறைவாகி உள்ளார்.
கொரோனா பொதுமுடக்கம் சமயத்தில், அரசு மட்டுமின்றி பல்வேறு தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் என அனைத்து தரப்பினரும் ஏழை மக்களுக்கு உதவிகள் செய்து வந்தனர். அப்போது மதுரை பகுதியில், சலூன் கடை வைத்துள்ள மோகன் என்பவரும் அந்த பகுதி மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கி பெரும் வரவேற்பை பெற்றார். மேலும், தனது மகளின் உயர்கல்விச் செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை கொரோனா நிதிக்காக வழங்கியிருந்தார். இதை அறிந்த பிரதமர் மோடி, மோகனின் செயலை பாராட்டினார். மேலும், ரேடியோ உரையான மான் கி பாத் உரையிலும் பாராட்டு தெரிவித்திருந்தார்.
இவருக்கு பாஜகவினர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். சமீபத்தில் மோகன் பாஜகவில் குடும்பத்தோடு இணைந்தார். தொடர்ந்து சலூன் கடையும் நடத்தி வந்த நிலையில், கந்து வட்டித் தொழிலும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மதுரை அன்பு நகரை சேர்ந்த கங்கைராஜன் என்பவர் மருத்துவ செலவுக்காக வாங்கிய 30,000 ரூபாய் பணத்தை வட்டியுடன் திரும்பி கொடுத்த பின்னரும் மோகன் தன்னை தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டுவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் மோகன் மீது அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசாரணைக்கு வருமாறு மோகனுக்கு காவல்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர். இதன் காரணமாக மோகன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.