சென்னை: நீதிமன்றத்தை விமர்சித்த நடிகர் சூர்யாவின் அறிக்கை விவகாரமாக மாறி உள்ள நிலையில், ஒன்றிணைவோம்… மாணவர்களோடு துணை நிற்போம்…! என்று, சூர்யா மீண்டும் டிவிட் பதிவிட்டுள்ளார்.
நீட் தேர்வு பயம் காரணமாக, தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், நீதிமன்றத்தை விமர்சித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இது நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி, அவர்மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதி ஒருவர் கடிதம் எழுதி உள்ளார். இதனால், சூர்யா மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், சில ஓய்வுபெற்ற நீதிபதிகள், நடிகர் சூர்யா தெரியாமல் கருத்து தெரிவித்து விட்டதாக கூறி, அவரை பெருந்தன்மையுடன் மன்னிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில், தற்போது சூர்யா புதிய டிவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், ஒன்றிணைவோம்… மாணவர்களோடு துணை நிற்போம்…! ஒருத்தர் படிச்சா வீடு மாறும்; ஒவ்வொருத்தரும் படிச்சா இந்த நாடே மாறும். இந்த பொருளாதார நெருக்கடியில் நிறைய மாணவர்கள் தங்கள் கல்வியை பாதியிலேயே கைவிடுகிறார்கள். நாம நெனச்சா அதை மாத்திடலாம் என்று கூறியுள்ளார்.
மேலும் அகரம் அறக்கட்டளைக்கு கல்வி ஊக்கத்தொகைக்காக இதுவரை 3030 பேர் விண்ணப்பித்து உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், தங்களது அகரம் பவுண்டேஷன் கல்விக்காக என்னவெல்லாம் செய்து வருகிறது என்பது தொடர்பான வீடியோவையும் இணைத்துள்ளார்.