சென்னை: தமிழகத்திற்கு கொரோனா நிதியாக ரூ.335.41 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. 5-வது நிதிக்குழு பரிந்துரையின்படி கொரோனா பரவல் மற்றும் அதனால் ஏற்படும் நிதி இழப்புகளை சமாளிக்க 6வது தவணையாக இந்த நிதி விடுவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இந்தியா அளவில் கொரோனாபாதிப்பில் தமிழகம் 2வது இடத்தில், உள்ளது. கொரோனா தொற்று பரவல் நடவடிக்கை மற்றும் செலவுகளால் திணறி வரும் தமிழகஅரசு, அதிக நிதி ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறது. சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்தியஅரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களுக்கு உதவும் வகையில், பாதிப்புகளுக்கு ஏற்ப 1பரிந்துரையின்படி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அதன்படி, தமிழகம், கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு 6-வது தவணையாக ரூ.6,195.08 கோடியை, நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது. இதில், தமிழகத்திற்கு ரூ.335.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, கேரளாவுக்கு ரூ.1,276.91 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியானது கொரோனா நெருக்கடியின் போது மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஆதாரங்களை வழங்கும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.