சென்னை தலைமைச்செயலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட முக்கிய அதிகாரிகள் பங்குபெற்றனர்.
இந்த ஆலோசனை முடிவு குறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று குறைந்து வருகிறது என்று கூறியவர், மருத்துவ நிபுணர்கள், காவல்துறையினரின் செயல்பாட்டால் நோய் தொற்று குறைந்து வருகிறது என்றார்.
தமிழகத்தில் நாளொன்றுக்கு 85,000 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன, தமிழகத்தில் பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தி உள்ளதால் தொற்று குறைந்துள்ளது
கொரோனா படிப்படியாக குறைந்து வருவதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். பல்வேறு மாவட்டங் களில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது.
கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளீனிக் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கிளினிக்கில், மருத்துவர்கள், செவிலியர், மருத்துவ உதவியாளர் ஆகியோர் இடம் பெறுவர். ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத பகுதிகளில் மினி கிளீனிக் அமைக்கப்படும் என்று கூறினார்.
மேலும், 40 சதவீத மக்கள் முக கவசம் அணிவது இல்லை என்றும், முக கவசம் அணியாதவர் களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.
மீன் வாங்க ஏராளமானோர் காசிமேடு துறைமுகத்தில் குவிவதால், அங்கு தனி மனித இடைவெளி பின்பற்றப்படுவதில்லை, முககவசம் அணிவதில்லை என்று குற்றம் சாட்டியவர், ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சி வாங்க கூட்டமாக குவிகின்றனர்; அப்போது விதிகள் பின்பற்றப்பட வேண்டும். ஞாயிறுதோறும் இறைச்சி வாங்க குவியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் குவிவதை காவல் துறையினர் தடுக்க வேண்டும் என்றும், டெங்கு கொசுவை தடுக்க தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.