சண்டிகர்: ஹரியானா சபாநாயகர், 2 பாஜக எம்எல்ஏக்களுக்கு கொரோனா  வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹரியானாவின் சட்டமன்ற சபாநாயகர் கியான் சந்த் குப்தாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் அனில் விஜ் உறுதிப்படுத்தியுள்ளார். சட்டமன்ற கூட்டத் தொடர் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது.

அதற்கு 2 நாட்களுக்கு முன்பு இந்த விவரம் வெளியாகி உள்ளது. அவர் தவிர, பாஜக எம்எல்ஏக்கள் 2 பேருக்கும் கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா தொற்று காரணமாக நடப்பு சட்டசபை தொடரை துணை சபாநாயகராகிய ரன்பீர் கங்வா நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் என அனைத்து எம்எல்ஏக்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இல்லை என்று சோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமே வரும் 26ம் தேதி கூட்டத் தொடரில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.