சென்னை:
தமிழகத்தில் இ-பால் நடைமுறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவது வெளிச்சத் துக்கு வந்துள்ள நிலையில், இந்தமுறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அளித்துள்ள வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இபாஸ் பெறும் முயற்சியில் சுமார் 220 பேர் புரோக்கர்கள் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருவ தாகவும் பல லட்சக்கணக்கான பணம் கைமாறி வருவதாகவும், கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தெரிவித்து உள்ளார். இதற்குத்தான் இ-பாஸ் முறையை நீட்டித்துக் கொண்டே செல்கிறதா தமிழக அரசு என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தமிழகஅரசு அமல்படுத்தி உள்ள இ-பாஸ் நடைமுறை பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கொரனா ஊரடங்கு அமல்படுத்திய பின்னர் பொதுமக்கள் வெளியில் வரத் தடைவிதித்து மாநில அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இறுதி சடங்கு, திருமணம், மருத்துவ சிகிச்சை பெறுவோர் வெளி மாவட்டங்களுக்கு செல்ல சில வழிமுறைகளை பின்பற்றி மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அனுமதி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. வெளிமாவட்டங்களுக்கு செல்வோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து அவசர பாஸ் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, பொதுமக்கள் ஆன்லைன் விண்ணப்பம் செய்து பாஸ் பெற்று செல்கின்றனர். ஆனால், இந்த இ-பாஸ் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது. சரியான காரணங்கள் இருந்தும் முறையான ஆவணங்கள் இல்லாததால் ஏராளமானோர் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
சாதாரண மக்களின் அவசர தேவைக்கு இ.பாஸ் கொடுப்பதில் தீவிரம் காட்டும் தமிழகஅரசு, சமீபத்தில், நடிகர் ரஜினிகாந்த் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று தனது மகளை பார்த்து சர்ச்சையானது. அவர் மருத்துவ அவசரம் என்று அரசை ஏமாற்றிச்சென்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு சென்று வாக்கிங் சென்று வந்தது தெரிய வந்தது. இது மக்களிடையே தமிழகஅரசு மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இ-பாஸ் நடைமுறையை வருகிற 31ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் ஏராளமானோர் இ-பாஸ் பெற முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேசமயம், இந்த இ-பாஸ் நடைமுறை டிராவல்ஸ் ஏஜென்ஸி நடத்துபவர்கள், புரோக்கர்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சாதாரண மக்கள், சரியான காரணங்களுடன் இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தால் ஏதேனும் காரணத்தை சொல்லி அவர்களுக்கு இ-பாஸ் மறுக்கப்படுகிறது. ஆனால், புரோக்கர்களுக்கு இ-பாஸ் எளிதாக கிடைத்து விடுகிறது. இதற்காக ரூ.2,000த்திலிருந்து ரூ.4,000 வரை புரோக்கர்கள் வசூலிக்கிறார்கள்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இ-பாஸிற்கு ஒப்புதல் அளிக்கும் நபர்களின் துணையுடன் நடக்கும் இந்த முறைகேட்டில் அவர்களுக்கும் லஞ்சம் கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுகின்றன.
அதேபோல், அரசு பதவியில் உள்ளவர்களும், உயர் அதிகாரிகள் உதவியுடன் எளிதாக இ-பாஸ் பெற்றுக் கொள்கின்றனர். சாமானிய மக்களால் இ-பாஸ் பெற முடியாத காரணத்தால் புரோக்கர்கள் மூலமாகவும், வேறு வழிகளிலும் திருட்டுத்தனமாக இ-பாஸ் பெற்று செல்கின்றனர். இது போலீசார் லஞ்சம் பெற வழிவகை செய்கிறது.
இதுபோன்று பலரும் இ-பாஸ் பெற முடியாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இ-பாஸ் நடைமுறை மூலம் புரோக்கர்கள் சம்பாதிக்கவும், அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறவுமே இ-பாஸ் முறையை தமிழக அரசு நீட்டித்துக் கொண்டே செல்கிறதா என அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது தொடர்பான விசாரணையில் 2 புரோக்கர்கள் திருச்சியில் கைது செய்யப்பட்டனர். முன்னதாக, இந்தியா முழுதும் செல்ல, 1,500 ரூபாய் கொடுத்தால், இரண்டு மணி நேரத்தில், இ – பாஸ் பெற்று தருவதாக, வேலுாரில், ‘வாட்ஸ் ஆப் குரூப்’களில் தகவல் பரவியது.
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வேலூர் அருகே உள்ள அரியூர் போலீசார் விசாரித்து, வாட்ஸ்அப் வெளியிட்ட வேலுார் பெரிய அல்லாபுரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை கைது கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின்படி, திருச்சியில் பதுங்கியிருந்த, வடிவேல், 27, ஸ்டாலின், 26, ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்னர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
வேலுாரில் பிடிபட்ட வாலிபர், இதற்காக தனியாக வாட்ஸ்அப் குரூப் உருவாக்கி, ‘வாட்ஸ் ஆப் குரூப்’ துவக்கி, இ – பாஸ் கேட்பவர்களின் ஆதார் கார்டுகளை, அந்த வாலிபர், திருப்பூரில் இருந்த வடிவேலுக்கும், திருச்சியில் உள்ள ஸ்டாலினுக்கும் அனுப்புவார். அவர்கள், அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து, இ – பாஸ் பெற்று, வாலிபருக்கு அனுப்பி வந்துள்ளனர். இந்த விவகாரத்தில், மூளையாக வடிவேலும் அவருக்கு துணையாக ஸ்டாலினும் செயல்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், அவர்கள் தமிழகம் முழுதும், 220 புரோக்கர்களை நியமித்துள்ளனர். இதன் மூலம் நாளொன்றுக்கு, 5ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இ – பாஸ்கள் பெற்று வழங்கி உள்ளனர். இதன் மூலம் தினசரி லட்சக்கணக்கான ரூபாய் கைமாறி உள்ளது.
இவ்வாறு போலீசார் தெரிவித்து உள்ளார்.
[youtube-feed feed=1]