சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பூத் சிலிப் இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட் டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து தேர்தல் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே வாக்குச்சாவடிகள் அமைத்தல் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமித்தல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள், வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த கையேடுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தற்போது கரோனா பரவல் சூழல் காரணமாக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், உடல் வெப்பநிலை 98.4 ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக, கொரோனா அறிகுறியுடன் இருப்போர் மற்றும் கரோனா தொற்றால்சிகிச்சை பெற்று வருவோர் வாக்களிக்க ஏதுவாக, வாக்களிக் கும் காலம், 11 மணி நேரமாக நீட்டிக்கப்படுகிறது. அதன்படி காலை 7 மணி முதல் இரவு 6மணி வரை வாக்களிக்கும் நேரமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் வாக்காளர்கள் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பூத் சிலிப் இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு அன்று பூத் சிலிப் இல்லையென வாக்காளரை திருப்பி அனுப்பக்கூடாது எனவும், வாக்காளர் அட்டையை சோதித்து வாக்களிக்க அனுமதிக்கலாம் எனவும் மாநில தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு 14 மாற்று ஆவணங்களில் ஒன்றை வைத்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.