திருச்சி: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி செப்டம்பர் 13ந்தேதி அறிவிக்கப்படும், நகராட்சி, மாநகராட்சி தேர்தல் நடந்த இன்னும் 4 மாதங்களுக்கு மேல் ஆகும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் செப்டம்பர்15ந்தேதிக்குள் நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதியை இன்னும் அறிவிக்காமல் மாநில தேர்தல் ஆணையம் மெத்தனம் காட்டி வருகிறது. இதனால், உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, 9 மாவட்டங்களில் நடத்தப்பட வேண்டிய ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதியை வரும் 13ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்றார்.
மேலும், தமிழகத்தில் புதிதாக 30 நகராட்சிகளும் 6 மாநகராட்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அங்கு வார்டு வரையறை பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் அறிக்கையை முறைப்படி வெளியிட ஒருமுறை 100 நாட்களும், மற்றொரு முறை 30 நாட்களும் அவகாசம் தேவைப்படுவதால் வரையறை பணியில் தாமதமாகிறது. இதனால், மாநகராட்சி, நகராட்சித் தேர்தல் நடந்த இன்னும் 4 மாதங்களுக்கு மேல் ஆகும். மாநகராட்சி, நகராட்சி விரிவாக்கத்தில் சேர விரும்பும் கிராமங்கள் இணையலாம். அவ்வாறே சேர்க்கப்பட்டாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் முடியும் வரை ஆட்சியில் இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.