99 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

Must read

jayalalitha letter
இலங்கை சிறைகளில் உள்ள 99 தமிழக மீனவர்களையும் வெளியுறவு துறை அமைச்சகம் மூலம் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
அவர் மேலும் அக்கடிதத்தில், ’’புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 3 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் 23.3.16 அன்று பிடித்து கடத்தி சென்று விட்டது பற்றி உங்கள் கவனத்துக்கு கொண்டு வர நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். நான் பல தடவை வேண்டுகோள் விடுத்தும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கடத்தப்படுவதைத் தடுக்க மத்திய அரசு எந்த ஒரு உறுதியான நடவடிக்கையும் எடுக்காதது வருத்தத்தை அளிக்கிறது.
தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக்ஜலசந்தியில் தொடர்ந்து மீன் பிடிப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும். இதற்காக 1974, 1976–ம் ஆண்டுகளில் இலங்கையுடன் போட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்.
கச்சத்தீவையும் இலங்கையிடம் இருந்து இந்தியா திரும்பப் பெற வேண்டும். மேலும் இந்தியா–இலங்கை மீனவர்களுக்கு இடையே நீண்ட காலமாக உள்ள மீன்பிடி பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
23.3.16 அன்று இலங்கை கடற்படையால் கடத்தி செல்லப்பட்ட 1 எந்திரப்படகு உள்பட தற்போது தமிழக மீனவர்களின் 83 எந்திர படகுகள் இலங்கை கட்டுப்பாட்டில் உள்ளன. நீண்ட நாட்களாக பயன்படுத்தாத காரணத்தாலும், பருவ மழை காலத்தில் நனைந்த காரணத்தாலும் அந்த படகுகள் சேதம் அடைந்துள்ளன.
83 படகுகளையும் உடனடியாக இலங்கையிடம் இருந்து மீட்க வேண்டும். மேலும் தாங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு இலங்கை சிறைகளில் உள்ள 99 தமிழக மீனவர்களையும் வெளியுறவு துறை அமைச்சகம் மூலம் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’என்று கூறியுள்ளார்.

More articles

Latest article