சென்னை: சென்னையில் மழைநீர் தேங்கிய இடங்களில் 95% வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும், தமிழகஅரசை குறைகூறும்,  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் மழைநீர் பாதிப்பை எங்கேயாவது சென்று பார்த்தாரா? என அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னையில் கடந்த இருநாட்கள் பெய்த மழை காரணமாக, மீண்டும் மாநகர் முழுவதும் தண்ணீர் தேங்கியது. இருந்தாலும், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மேயர் இரவோடு இரவாக களத்தில் இறங்கியதால், ராட்சத மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டது. இதனால், மத்திய சென்னை, தென்சென்னை பகுதிகள் மழைநீரின்றி காட்சி அளித்தது. ஆனால், வடசென்னை எப்போதும்போல மழைநீர் தேங்கி குளம்போல காட்சி அளித்தது.

இதை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தேமுக தலைவர் விஜயகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்பட பலர் விமர்சனம் செய்திருந்தனர்.

இந்த நிலையில், சென்னையில் பெய்த மழையில் அதிக பாதிப்புக்குள்ளான திருவிக நகர் மண்டலத்தில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதில் மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர்  செய்தியாளர்கள் சந்தித்த சேகர்பாபு,  சென்னையில் மழைநீர் தேங்கிய இடங்களில் 95% வெளியேற்றப்பட்டுள்ளது. சென்னையில் மழைநீர் பாதிப்பை எங்கேயாவது சென்று எடப்பாடி பழனிசாமி பார்த்தாரா? கடந்த அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடு காரணமாக மழைநீர் தேங்கிய அனைத்து இடங்களிலும், இந்தாண்டு ஒரு சொட்டு கூட மழைநீர் தேங்கவில்லை. எடப்பாடி பழனிசாமி குறை கூறினாலும், எங்களின் பணி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். மத்திய அரசுக்கு பயந்து பயந்து தான் அதிமுக ஆட்சியை நடத்தியது.

இவ்வாறு கூறினார்.