லண்டன்
இங்கிலாந்தில் ஒமிக்ரான் பரவல் மிகவும் கடுமையாகி உள்ளது.
தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் ஒமிக்ரான் பரவல் முதலில் கண்டறியப்பட்டது. அது வேகமாகப் பல உலக நாடுகளில் பரவி உள்ளது. இதன் காரணமாக உலகெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒமிக்ரான் உடன் ஏற்கனவே கண்டறியப்பட்ட டெல்டா பரவலும் அதிகரித்துள்ளது.
இதையொட்டி பல உலக நாடுகளில் கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. டெல்டா வகை வைரஸ்களை விட ஒமிக்ரான் வகை வைரஸ் வேகமாகப் பரவும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த வைரஸ்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டாலும் பாதிக்கும் என்பதால் பூஸ்டர் டோஸ் போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு மிகவும் கடுமையாகி உள்ளது. இங்குக் கண்டறியப்படும் கொரோனா பாதிப்பு அடைந்தோரில் 93.4% பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தவிர 5.6% பேருக்கு டெல்டா பாதிப்பு உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,93,776 பேர்களில் 1,81,155 பேருக்கு ஒமிக்ரான் மற்றும் 10,862 பேருக்கு டெல்டா பாதிப்பு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.