சென்னை: சட்டசபை தேர்தலுக்கு 92,300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவீர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக தேர்தல் ஆணையம் சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை செய்து தேர்தலுக்கு தயார்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்கனவே செலுத்தப்பட்ட வாக்குகளின் பதிவுகள் அனைத்து அழிக்கப்படும்.
தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடுத்து வரும் தேர்தலுக்கு பயன்படுத்தும் வகையில் தயார் நிலையில் உள்ளதா என்பது குறித்து முதற்கட்ட சோதனை மேற்கொள்ளப்படும். இது தொடர்பான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
தற்போது வரை 26 மாவட்டங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட பரிசோதனை முடிவு பெற்றதாகவும், சட்டசபை தேர்தலுக்கு 92,300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பிப்ரவரி 3ம் தேதிக்குள் வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட பரிசோதனை முடிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.