வேலூா்: வேலூரில் இருந்து காலாவதியான 9000 ஈவிஎம் (வாக்குப்பதிவு இயந்திரங்கள் – எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) இயந்திரங்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில், வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சென்னையில் உள்ள பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் முதன்முதலாக கடந்த 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோதலின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (ஈவிஎம்) நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக அனைத்து தேர்தல்களிலும் முழுஐமயாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதிகளில், முதலில் வெளியான எம்-1 வகை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலூர் மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்டன. பின்னர் இந்த இயந்திரங்கள் அழிக்கப்பட்டு, மேலும் நவீனப்படுத்தப்பட்ட இயந்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, வேலூரில் இருந்த சுமார் எம்-1 வகை 9 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் காலாவதியான நிலையில், அதை அழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, வாக்குப் பதிவு இயந்திரங்களை அழிப்பதற்காக, ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் முன்னிலையில், அனைத்து அரசியல் கட்சியினா் மேற்பார்வையில், நேற்று சென்னையில் உள்ள பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
வேலூா் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து 2,000 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 1,310 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், ஆட்சியா் அலுவலகக் கிடங்கில் இருந்து 6,113 கட்டுப்பாட்டு கருவிகள் என மொத்தம் 9,000 வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னை பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை முழுமையாக அழிக்கப்படும் என கூறப்படுகிறது.