900 கி.மீ.தூரம் நடந்த  9 மாத கர்ப்பிணி..

டெல்லி பக்கமுள்ள நொய்டாவில் காய்கறி வியாபாரம் செய்து வந்த சந்தீப், ஊரடங்கால் தனது சொந்த ஊருக்குக் கால்நடையாகவே புறப்பட்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம் சுபாலில் உள்ள அவரது சொந்த ஊருக்கு, 9 மாத கர்ப்பிணி மனைவி ரேகா தேவியுடன் கடந்த திங்கள் கிழமை நடக்க ஆரம்பித்தார்..

பசியுடன் சந்தீப் நடந்தார். பசியையும், பிரசவ வலியையும் தாங்கிக் கொண்டு ரேகா நடந்தார்.

சாலை மார்க்கமாக 900 கிலோ மீட்டர் நடந்து  உ.பி.-பீகார் மாநில எல்லையான கோபால் கஞ்சை  அடைந்தபோது, ரேகா பிரசவ வலியால் துடித்தார்.

மயங்கிச் சரிந்தார்.

சந்தீப்பின் கூக்குரலுக்குச் செவி சாய்த்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் ரேகாவை, 10 கி.மீ. தொலைவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு ரேகாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

வழக்கமான மருத்துவமனை போல், ரேகாவை அனுமதிக்க அந்த மருத்துவமனை  டாக்டர்கள் கெடுபிடி காட்டியுள்ளனர்.

‘ உன் மனைவிக்கு கொரோனா தொற்று இருக்கலாம்’’ என்று ரேகாவை  அனுமதிக்க டாக்டர்கள் மறுக்க-

கோபால்கஞ்ச் மாவட்ட ஆட்சியரை, அவரது  அலுவலக போனில் தொடர்பு கொண்டு, கதறியுள்ளார், சந்தீப்.

மருத்துவமனை நிர்வாகத்துக்கு ஆட்சியர் ஆணையிட்ட பிறகே, ரேகாவை அனுமதித்து, பிரசவம் பார்த்துள்ளனர், டாக்டர்கள்.

– ஏழுமலை வெங்கடேசன்