சென்னை: செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கம்பிகளின் விலை உயர்வு ஏற்படுத்துவதாக கூறி 9முன்னணி நிறுவனங்கள் மீது சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ பதில் அளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நாடு முழுழவதும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக, அனைத்து வகையான பொருட்களும் விலை உயர்ந்து வருகின்றன. இதற்கிடையில் கட்டுமான பொருட்களின் விலையும் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவர்களது மனுவில், கடந்த 6 மாதங்களாக இரும்புக் கம்பிகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், கம்பிகள் கிடைப்பதில் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருவதாகவும், அதைக் காரணம் காட்டி அதிக விலைக்குக் கம்பிகளை விற்பனை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிறுவனங்கள் தங்களுக்குள் ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு, இரும்புக் கம்பி தயாரிக்கும் 9 முன்னணி நிறுவனங்களும், கூடுதல் விலைக்குக் கம்பிகளை விற்று சட்டவிரோத லாபம் ஈட்டி வருகிறது. இதனால், ஒப்பந்ததாரர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, சிபிஐ மூலம் விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்த மனுமீது உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து மனுகுறித்து , 2 வாரத்தில் பதிலளிக்கும்படி, சிபிஐக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.