ராமநாதபுரம்: இரண்டுநாள் பயணமாக நேற்று மாலை ராமநாதபுரம் மாவட்டம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேரூந்து நிலையத்தை திறந்து வைத்தார். அத்துடன் ராமநாதபுரம் மாவட்டத்துக்கான 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
முன்னதாக, சிவகங்கை மாவட்டம், இடைக்காட்டூர் கிராமத்தில் உள்ள தொன்மை வாய்ந்த திரு இருதய ஆண்டவர் தேவாலயத்தில், மொத்தம் 1 கோடியே 55 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணியினை முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராமநாதபுரத்தில் இன்று (03.10.2025) நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக , முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து ராமநாதபுரம் புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் இருந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரைக்கு நேற்று மாலை 06.00 மணியளவில் புறப்பட்டுச் சென்றார். இதற்காகச் சென்னை விமான நிலையம் வந்திருந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார். முதலமைச்சரை , அமைச்சர்கள் சேகர்பாபு பாபு, தா.மோ. அன்பரசன், எ.வ. வேலு, ஆவடி நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் வழியனுப்பி வைத்தனர். மேலும் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எனப் பலரும் விமான நிலையத்தில் குவிந்தனர்.
இதனையடுத்து மதுரை விமான நிலையத்திற்குச் சென்றடைந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு திமுகவினர் மற்றும் பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து கார் மூலம் ராமநாதபுரம் சென்றார். ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று 176 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
ராமநாதபுரம் பேராவூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், ரூ.738 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கிவைத்தார். அதன் ஒரு பகுதியாக, ராமநாதபுரத்தில் ரூ. 176 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், பரமக்குடியில் கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி கட்டடம், கோவிலாங்குளத்தில் பள்ளி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி, தங்கச்சிமடத்தில் மேல்நிலைப்பள்ளி கட்டடங்களை திறந்துவைத்தார்.
மேலும், ரூ. 134 கோடி மதிப்பிலான 150 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 50,712 பயனாளிகளுக்கு ரூ. 426 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில், அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 9 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
- “ரூ.30 கோடியில் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாக மாற்றப்படும்.
- திருவாடானை, ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் முக்கிய கண்மாய்கள் ரூ.18 கோடியில் மேம்படுத்தப்படும்.\
- ரூ. 4.90 கோடியில் கடலாடி வட்டத்திலுள்ள செல்வானூர் கண்மாய் மற்றும் சிக்கல் கண்மாய் மறுசீரமைக்கப்படும் !
- கடலாடி வட்டத்தில் உள்ள கண்மாய் ரூ.2.6 கோடியில் சிக்கல் கண்மாய் ரூ.2.3 கோடியில் மறுசீரமைப்பு.
- பரமக்குடியில் ரூ.4.5 கோடியில் புதிய அலுவலக கட்டடம் கட்டப்படும்.
- ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் நவீன வணிக வளாகமாக மாற்றப்படும்.
- ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் ரூ.10 கோடி செலவில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்படும்.
- கீழக்கரை நகராட்சிக்கு ரூ.3 கோடியில் புதிய அலுவலகக் கட்டடம் கட்டப்படும்.
- கமுதியில் விவசாயிகள் நலன் கருதி ரூ.1 கோடியில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.
இவ்வாறு 9 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
முன்னதாக நேற்று மாலை சிவகங்கை மாவட்டம், இடைக்காட்டூர் கிராமத்தில் உள்ள தொன்மை வாய்ந்த திரு இருதய ஆண்டவர் தேவாலயத்தில், மொத்தம் 1 கோடியே 55 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணியினை முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சிவகங்கை மறை மாவட்ட ஆயர் ஆனந்தம், இடைக்காட்டூர் திருத்தல பங்குத் தந்தை ஜான் வசந்தகுமார் உள்ளிட்ட பேராயர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.