டெல்லி: நாடு முழுவதும் உள்ள மத்திய அரசுத் துறைகளில் 9.79 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன என நாடாளுமன்றத்தில் மத்திய இணை மந்திரி தெரிவித்தார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மத்தியஅரசில் உள்ள காலி பணியிங்கள் எவ்வளவு, அதை நிரப்ப எடுத்து வரும் நடவடிக்கைகள் என உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய பணியாளர் துறை இணை மந்திரி ஜித்தேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக இந்த பதிலை அளித்துள்ளார்.
அதில், மத்திய அரசுப் பணிகளில் 9.79 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. , ‘2021 மார்ச் செலவினத் துறையின் ஊதிய ஆய்வு அறிக்கையின்படி மத்திய அரசுக்கு கீழ் உள்ள பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 9 லட்சத்து 79 ஆயிரத்து 327 பணியிடங்கள் காலியாக உள்ளன, அதுபோல இந்திய குடிமைப் பணிகளில் 1472 காலிப் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.