சென்னை: தமிழகத்தில் புதிதாக 86 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 90,824. 127 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர்.
அவர்களில் 28 நாள்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் 10,814 பேர். இதுவரை 4,612 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 571 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 பேர் முழுமையாக குணம் அடைந்துள்ளனர்.
இன்று புதியதாக 86 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 85. ஒருவர் மட்டும் துபாய் பயணம் மேற்கொண்டவர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் 2ம் கட்டத்தில் தான் இருக்கிறது. அது 3ம் கட்டத்துக்கு சென்றுவிட்டதா என்பதை ஆய்வுக்கு பின்பே கூற முடியும். மகாராஷ்டிராவை காட்டிலும் தமிழகத்தில் அதிக பரிசோதனைகள் நடக்கின்றன.
நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக பரிசோதனை மையங்கள் உள்ளன என்றார். இன்று மேலும் 86 பேருக்கு புதியதாக தொற்று ஏற்பட்டதையடுத்து 485ல் இருந்து 571 ஆக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.