டெல்லி:

ந்தியாவில் எம்பிபிஎஸ் படிக்க, நீட் தேர்வு எழுத வேண்டிய நிலையில், ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் படித்து வருகின்றனர். ஆனால், அவர்கள் இந்தியாவில் மருத்துவராக பணிபுரிய வேண்டுமென்றால்,  அகில இந்திய மருத்துவக்கழகம் நடத்தும் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.

இந்த நிலையில், வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ் படித்தவர்கள், இந்தியாவில் நடைபெறும் தகுதித் தேர்வை எழுதிய நிலையில், அதில்  84 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

நமது நாட்டில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காத நிலையில், பல பணக்காரர்கள் தங்களது பிள்ளைகளை, வெளிநாடுகளில் உள்ள மருத்துவக்கல்லூரியில் சேர்த்து மருத்துவம் படிக்க வைக்கின்றனர். அதன்படி, துருக்கி, இஸ்ரேல், ரஷ்யா என பல நாடுகளுக்கு சென்று எளிதாக படித்து, டாக்டர் பட்டம்  பெற்று வருகின்றனர்.

ஆனால், அவர்கள் இந்தியாவில் பணியாற்ற வேண்டுமானால், தேசிய தேர்வுக் குழுமம் நடத்தும் அயல்நாட்டு மருத்துவ பட்டத் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே  மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற முடியும். இதற்காக Foreign Medical Graduate Examination (FMGE) எனப்படும் தேர்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இந்த தேர்வு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் தேர்வு எழுதியவர்களில் 84 சதவிகிதம் பேர் தோல்வி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே வேளையில்,  அமெரிக்கா,ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து,பிரிட்டன் ஆகிய 5 நாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு வருபவர்கள், இந்தியாவில் தேர்வு எழுத வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.