சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் மறைந்த வாழப்பாடியார் 83வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மந்தவெளி ராஜீவ் பவனில் அமைந்துள்ள வாழ்ப்பாடியார் சிலைக்கு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ், எம்.பி.க்கள் ஜி.கே.வாசன், விஜய்வசந்த் உள்பட பலர்  மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை  செய்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு 6முறை  தலைவராகவும், இரண்டு முறை மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் மறைந்த வாழப்பாடி இராமமூர்த்தி.  இவரது சொந்த ஊர், சேலம் மாவட்டத்தின் வாழப்பாடி. இவர் மத்தியஅமைச்சராக இருந்தபோது, தமிழ்நாடு, கர்நாடகம் இடையே ஏற்பட்ட காவிரி பிரச்சினை தீவிரமானது. இந்த விஷயத்தில் மத்தியஅரசு முறையான நடவடிக்கை எடுக்காததாலும், அப்போது கர்நாடகத்தை ஆண்ட காங்கிரஸ் மாநில அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதால், அதிருப்தி அடைந்தவர்,, தமிழ்நாட்டின் உரிமைக்காகவும், தமிழக விவசாயிகளுக்காகவும், தனது மத்தியஅமைச்சர் பதவியை தூக்கி எறிந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வாழப்பாடியாரின் துணிச்சல் மிக்க நடவடிக்கை தமிழக மக்கள் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளால் வெகுவாக பாராட்டப்பெற்றது.  இதனால், தமிழ்நாடு விவசாயிகள் குறிப்பாக டெல்டா விவசாயிகளின் மனதில் இடம்பிடித்தது மட்டுமின்றி, தமிழ்நாட்டின் வரலாற்றிலும் இடம்பிடித்தார்.

மறைந்த வாழப்பாடியாரின் 83வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மந்தைவெளியில் உள்ள ராஜீவ்பவனில் உள்ள வாழப்பாடியார்  திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்  மூத்த உறுப்பினரும், மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ், தமாகா தலைவரும் எம்.பி.யுமான ஜிகே.வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான விஜய் வசந்த் உள்பட காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் சமுதாய தலைவர்களும் மாலை அணிவித்து , மலர்தூவி மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியின்போது, வாழப்பாடியாரின்  மகனும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவருமான  இராம.சுகந்தன், இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனம் தலைவருமான இராம.கர்ணன் உள்பட கட்சியினர் உடனிருந்தனர்.

வாழப்பாடியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சொந்த ஊரான வாழப்பாடி  பேருந்து நிலையம் முன்பு தலைவர்  வாழப்படியார் திருவுருவப் படத்திற்கு அப்பகுதி காங்கிரஸ் கட்சியினர்  மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  அதைத்தொடர்ந்து  அங்கு அமைந்துள்ள வாழப்பாடியார் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.