சென்னை: 2025- 26ஆம் கல்வியாண்டிற்கு ஆர்.டி.இ திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை அக்டோபர் 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. ஆர்.டி.இ (இலவச கட்டாய கல்வி) திட்டத்தின் கீழ் 81,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆர்.டி.இ (Right To Education) எனப்படும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து தனியார் பள்ளிகளிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 7,717 தனியார் பள்ளிகளில் இந்த திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி, 1ஆம் வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். குறைந்தபட்சம், 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே ஏற்று வருகிறது.
2025 – 26 கல்வியாண்டிற்காக தற்போது 81,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதில், LKG வகுப்பிற்கு 81,927 மாணவர்களும், முதல் வகுப்பிற்கு 89 மாணவர்களும் RTE 25 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் மாணவர் தேர்வு மற்றும் சேர்க்கை அக்டோபர் 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து, ஒதுக்கீட்டை விட குறைவான விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில் அக்டோபர் 30ஆம் தேதி சேர்க்கை நடைபெறும். அதனைத் தொடர்ந்து அக்டோபர் 31ஆம் தேதி ஒதுக்கீட்டை விட அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில், தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் முன்னிலையில் குலுக்கல் முறையின் (Random Selection) மூலம் மாணவர் தேர்வு மற்றும் சேர்க்கை நடைபெறும்.
இந்த சேர்க்கை நிறைவடைந்த பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் RTE ஒதுக்கீட்டின்கீழ் EMIS தளத்தில் இணைக்கப்படுவர். இதன்மூலம் அவர்கள் 2025-26 கல்வியாண்டிற்கான பெயர் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்படுவார்கள்.

ஆர்.டி.இ மாணவர்கள் சேர்க்கை எப்படி நடக்கிறது?
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில், மத்திய அரசால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய RTE நிதி விடுவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE Act) இன் கீழ் 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்க நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இச்சேர்க்கை முறையானது மாநில அரசின் ஆன்லைன் RTE தளம் மூலம் வெளிப்படையான நடைமுறையில் நடைபெற்று வருகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கள் இதனை மேற்பார்வை செய்கின்றன. ஆதரவற்றோர், எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டோர், மாற்றுப் பாலினத்தவர், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் மத்திய அரசால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்திற்கான நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக 2025–26 கல்வியாண்டிற்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
அனைத்து சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளின் நுழைவு வகுப்புகளில் (LKG அல்லது 1st Std) 25 சதவீதம் இடங்கள், இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு இலவச கட்டாய கல்வி உரிமை விதிகள், 2011 அடிப்படையில் நடைபெறும் இந்த மாணவர்கள் சேர்க்கை rteadmission@tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.
மேலும், ‘மாணவர்கள் சேர்க்கை ஒதுக்கீடு விதிமுறைகளின்படி, முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். அந்த வகையில், பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கு கீழ் இருக்க வேண்டும். இலவச கட்டாய கல்விக்கு உரிமைச் சட்டத்தில் மாணவர்கள் சேர்ந்தால் வசூலித்த கட்டணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும். RTE தகுதியுடைய மாணவர்களிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது. ஏற்கனவே கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், 7 நாட்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்’ என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது
இதனிடையே, கல்வி உரிமைச் சட்டத்தின் படி 25 சதவீத ஒதுக்கீட்டில், சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு கூடுதல் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், கல்விக் கட்டணத்தை திருப்பி வழங்கும் வகையில் மட்டுமே இந்த சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டினார். மேலும், மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 17ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் புதிதாக எந்த மாணவர் சேர்க்கையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.