சண்டிகர்: இந்தியாவில் உருமாறிய கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் சோதனை செய்யப்பட்ட நபர்களில் 81% பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஒராண்டாக உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது, உருமாறிய நிலையில் பரவி வருகிறது. முதன்முதலாக இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதால், அதற்கு லண்டன் கொரோனா என்று கூறப்படுகிறது. உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கும் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். புதிய உருமாறிய வைரஸ் 1,000 ஆண்களில் 13 அல்லது 14 பேரைக் கொல்லும் என்றும் வழக்கமான கொரோனா வைரஸை விட 70சதவிகிதம் வேகமாக பரவும் என இங்கிலாந்தின் தலைமை அறிவியல் ஆலோசகர் பேட்ரிக் வலன்ஸ் கூறியுள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான அறிவிப்பால் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் மிகவும் கவலை அடைந்துள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்த பயணி ஒருவருக்கு லண்டன் உருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், தற்போது ஏராளமானோருக்கு பரவி இருப்பது தெரிய வந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. அங்கு சமீபத்தில் 401 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் 326 மாதிரிகள் லண்டன் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, 81% இங்கிலாந்து பிறழ்வு (லண்டன் உருமாறிய கொரோனா) இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது.
இதனால், நாட்டில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மெத்தனம் காட்டக்கூடாது, தடுப்பூசிகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று, கோவிட் நிபுணர் குழுத் தலைவர், டாக்டர் கே.கே.தல்வார் எச்சரித்துள்ளார்.
இந்த உருமாறிய கொரோனா தொற்று பரவல் குறித்து பல்வேறு கருத்துக்களும் வெளியாகி வருகின்றன. பழைய கொரோனா வைரஸைவிட புதிய உருமாறிய கொரோனா ஆபத்தானது அல்ல என்று ஒரு தரப்பினர் கூறி வந்தாலும், நாட்டில் வழங்கப்பட்டு வரும், கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் இரண்டும் கொரோனா தொற்று பரவலில் இருந்து பாதுகாப்பதில் சிறந்தவை என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.